பெண்களின் எடை குறித்து கேள்வி எழுப்புவது வெட்கக்கேடானது- குஷ்பு கண்டனம்


பெண்களின் எடை குறித்து கேள்வி எழுப்புவது வெட்கக்கேடானது- குஷ்பு கண்டனம்
x

பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

சென்னை,

அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள ‘அதர்ஸ்' படம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் 'பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசிய கவுரி கிஷன், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கிடையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய கவுரி கிஷனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது கவுரி கிஷன் ‘இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?, என் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேட்கலாமா... இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?'', என்று ஆவேசப்பட்டார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

இந்தநிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதாவது, “பெண்களின் எடை குறித்து கேள்வி எழுப்புவது வெட்கக்கேடானது; பெண்களின் எடை குறித்து பேசுவது உங்களின் வேலையும் இல்லை. இப்படி பேசுபவர்களின் குடும்ப பெண்களிடம் நாங்களும் இதே கேள்வியை கேட்கலாமா?'' என்று உடல் எடை குறித்த சர்ச்சைக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் துணிச்சலாக கேள்வி எழுப்பிய நடிகை கவுரி கிஷனையும் பாராட்டியுள்ளார்.

1 More update

Next Story