வள்ளுவர் கோட்டத்தில் “பராசக்தி” படத்தின் விழா நடப்பது சிறப்பு - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்த படக்குழுவும் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
இதில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் “எனக்கு முதல் தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர் இயக்குநர் சுதா கொங்கரா தான். அதனால் அவரது படம் என்றால் எனக்கு தனி மகிழ்ச்சி வந்துவிடுகிறது. ஏற்கனவே பல பீரியாடிக் படங்கள் செய்து விட்டேன். இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்த படத்தில் எனக்காக இசையமைப்பாளர்களும் பாடல்கள் பாடிக் கொடுத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷான் ரோல்டனுக்கு நன்றிகள். அதேபோல் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ள படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. அந்த பாடலும் விரைவில் வெளியாகும்” என்றார்.
சிவகார்த்திகேயன் “ ‘பராசக்தி’ படம் அனைவரையும் கவரும் படமாக உருவாகியுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தின் விழா நடப்பது சிறப்பான அனுபவமாக உள்ளது ” என்று தெரிவித்தார்.






