அட்லீ சார் தான் ரெகமெண்ட் பண்ணாரு - சாய் அபயங்கர் பேச்சு

‘பத்தா’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, படக்குழுவினர் சார்பில் சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.
அட்லீ சார் தான் ரெகமெண்ட் பண்ணாரு - சாய் அபயங்கர் பேச்சு
Published on: 

சென்னை,

பத்தா படத்திற்கு வேறு ஒருவர் இசையமைப்பதாக இருந்த நிலையில், எனக்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்த அட்லீ சாருக்கு நன்றி. என்னை நம்பி இந்தப் படத்தில் இசையமைக்க வைத்த இயக்குநர் பாலாஜி சாருக்கும், என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி என சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடந்த 1-ந் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படம், விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியாகும் 3-வது படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற வெற்றி விழா

‘பத்தா’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, படக்குழுவினர் சார்பில் சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

“இந்த வெற்றி இயக்குநருக்குத்தான்”

விழாவில் பேசிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘பத்தா’ படத்தில் தனக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசினார். அவர் கூறுகையில், “இந்த வெற்றி முழுவதும் இயக்குநர் பாலாஜி சாருக்குத்தான் சேரும். படத்தைப் பார்த்து அவரிடம் பேசியபோது, இதில் நடித்த அனைவரும் தேசிய விருது பெறும் அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளதாகக் கூறினேன். வேறு ஒருவர் இசையமைப்பதாக இருந்த நிலையில், எனக்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்த அட்லீ சாருக்கு நன்றி. என்னை நம்பி இந்தப் படத்தில் இசையமைக்க வைத்த இயக்குநர் பாலாஜி சாருக்கும், என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி. அடுத்த படத்திலும் அட்லீ சாருடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்” என்றார்.

அட்லீயுடன் மீண்டும் இணையும் சாய் அபயங்கர்

இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராக்கா’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். வெளியீட்டுக்கு முன்பே ‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் மூலம் அட்லீ - சாய் அபயங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com