

சென்னை,
இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது ‘பிச்சைக்காரன்’ திரைப்பட இயக்குநர் சசியுடன் இணைந்து ‘நூறு சாமி’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ‘நூறு சாமி’ பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, படம் குறித்தும் இயக்குநர் சசி குறித்தும் பேசியுள்ளார். அதாவது, என் வாழ்க்கையில் 3 முக்கியமான மைல்கற்களை சசி சார் கொடுத்துள்ளார்.. 'டிஷ்யூம்' பட வாய்ப்பு, 'பிச்சைக்காரன்' படம், மூன்றாவது என்னை ஒரு லவ்வர் பாயாக மாற்றியதும் அவர்தான்
பெண்களுக்கு மிகவும் முக்கியமான படமாக ‘நூறு சாமி' இருக்கும். சமுதாயத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த படத்தை குடும்பத்துடன் வந்து பாருங்கள், என்று அவர் தெரிவித்துள்ளார்.