குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற ஜாக்கி சான்

ஜாக்கி சான் பல ஆண்டுகளாக குளிர்கால ஒலிம்பிக் விழாவின் துவக்கமான ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்று வருகிறார்.
90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் கடந்த 2010-ல் வெளியான 'கராத்தே கிட்' படத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகமான 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்து முடித்துள்ளார். ஜாக்கி சான் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான ரைட் ஆன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜப்பானில் அதிக வசூல் செய்த சீனத் திரைப்படமாகவும், 2023-ல் மலேசியாவில் அதிக வசூல் செய்த சீன படங்களில் டாப் 3 இடத்தையும் பிடித்தது. தற்போது மீண்டும் ரைட் ஆன் படத்தை இயக்கிய லாரி யாங் இயக்கத்தில் ' தி ஷேடோஸ் எட்ஜ்' என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்திருக்கிறார்.
71 வயதைக் கடந்தாலும் இளமைத் துடிப்புடன் செயல்படும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஜாக்கி சானுக்கு சுவிட்ஸர்லாந்தில் 78-வது 'லோகார்னோ திரைப்பட விழாவில்' வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது..
இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்ஸ்-க்கான ஒலிம்பிக் ஜோதியை, இத்தாலியில் உள்ள பாம்பேய் என்ற பழமையான இடத்தில் ஏந்திச் சென்றார். ஜாக்கி சான் இதற்கு முன்னரும், 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் உட்பட, பலமுறை ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றுள்ளார்.
பழம்பெரும் நகரமான பாம்பேயில் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக் கொண்டு நடிகர் ஜாக்கி சான் ஒலிம்பிக் வீரர்களுடன் ஓடிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. ஜாக்கி சான் பல ஆண்டுகளாக குளிர்கால ஒலிம்பிக் விழாவின் துவக்கமான ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்று வருகிறார்.






