‘ஜெயிலர் 2’: பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது - சீமான்

இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் சீமான் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
சீமான்
Published on: 

சென்னை,

தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஐயா ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

'ஜெயிலர் 2'

இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்! புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது.

நெஞ்சார்ந்த பாராட்டுகள்

'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ஐயா ரஜினிகாந்துக்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சனும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரனுக்கும் இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com