“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தில் நடிக்க உள்ளார்.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது. இதில் குட் நைட், டூரிஸ்ட் பேமிலி, லவ்வர் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தனது 7-வது படம் குறித்து தகவலை ஆங்கில புத்தாண்டான இன்று மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் - ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் பாரி இளவழகன் நடிக்கிறார் .
தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பேமிலி என்டர்டெயின்ராக உருவாகிவருகிறது. இப்படம் வருகிற கோடைவிடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






