“ஜன நாயகன்” சான்றிதழ் விவகாரம் - தணிக்கை வாரிய தலைவர் கருத்து தெரிவிக்க மறுப்பு

‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்திருந்தது.
“ஜன நாயகன்” சான்றிதழ் விவகாரம் - தணிக்கை வாரிய தலைவர் கருத்து தெரிவிக்க மறுப்பு
Published on

புதுடெல்லி,

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜன நாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்துசெய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால் ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்திவைத்து ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கூறியிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனக்கூறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் சென்னை  ஐகோர்ட்டு வழக்கை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷியிடம் ஜனநாயகன் தணிக்கை பிரச்சினை பற்றி கேட்கப்பட்டது. அந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதுபற்றி பேச மறுத்துவிட்டார்.

டாக்ஸிக் படத்தின் டீசர் சர்ச்சை பற்றி கேட்டபோது, தற்போது நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். யூடியூப் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் வரும் பல விஷயங்கள் தணிக்கை சான்று பெறாதவை. அவை மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் அதிகார வரம்புக்குள் வருவதில்லை. ஆன்லைனில் தாங்கள் பார்க்கும் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டவை என்ற அனுமானத்துக்கு யாரும் வரவேண்டாம்.திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர்களுக்குப் படங்கள் பார்த்து சான்றிதழ் அளிப்பது கடினமான வேலை. அவர்கள், திரைப் பட இயக்குநர்கள் சொல்வதையும் சமூகம் எதிர்பார்ப்பதையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com