

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், 'ஜன நாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின் 'ஜன நாயகன்' படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
நேற்று மாலை ஜன நாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
'ஜன நாயகன்' படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், சிரஞ்சீவி உள்ளிட்ட திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,
இந்நிலையில், நடிகை குஷ்பு , “ பைரசி என்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு திட்டமிட்ட திருட்டு.அதில் ஈடுபடுபவர்கள் சாதாரண குற்றவாளிகளாக கருதக்கூடாது;`ஜனநாயகன்' படம் கசிந்தது என்பது, அதில் உழைத்த ஒவ்வொரு கலைஞர், தொழில்நுட்ப நிபுணர், மற்றும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் நேர்ந்த கொடூரமான துரோகம்.இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதில் நியாயப்படுத்துவதற்கு எதுவும் இல்லை. நீங்கள் சினிமாவை உண்மையாக மதித்தால், பைரசியை மறுப்பீர்கள். படைப்பாளிகளுடன் நில்லுங்கள். நேர்மையுடன் நில்லுங்கள். ” என தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.