3-வது நாளாக ஜன நாயகன் படப்பிடிப்பு: திறந்த வேனில் வந்த விஜய்! ரசிகர்கள் உற்சாகம்


3-வது நாளாக ஜன நாயகன் படப்பிடிப்பு: திறந்த வேனில் வந்த விஜய்! ரசிகர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 4 May 2025 5:26 PM IST (Updated: 4 May 2025 8:02 PM IST)
t-max-icont-min-icon

ஜன நாயகன் படப்பிடிப்பின் போது விஜய்யை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர்.

பெரும்பாறை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்கிடையில், விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடிக்கு வந்துள்ளார். இங்கு தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ள விஜய் அங்கிருந்து படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருகிறார். இதற்காக கடந்த 1-ந் தேதி நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் தாண்டிக்குடி பகுதிக்கு வந்தனர்.

முதல் நாளில் மழை பெய்ததால் அவ்வப்போது படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2-வது நாளான நேற்று தங்கும் விடுதியில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்ட போது கன மழையால் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை அப்புறப்படுத்திய பின்னர் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். படப்பிடிப்பு முடிந்ததும் திறந்த வேனில் நடிகர் விஜய் வந்தார். அவரை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் சாலையின் இருபுறமும் திரண்டு உற்சாகமாக கையசைத்தனர்.

அதனை தொடர்ந்து 3ம் நாளான இன்று காலை மீண்டும் படப்பிடிப்புக்கு நடிகர் விஜய் சென்றார். அரசன் கொடையில் உள்ள கதவுமலை நாதன் சிவன் கோவில் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கும் விஜய்யை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர். படப்பிடிப்பு இன்று முடிந்தால் நாளை அவர் சென்னை திரும்பக்கூடும் என படப்பிடிப்பு தளத்தினர் தெரிவித்தனர்.

1 More update

Next Story