

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான கடைசித் திரைப்படம் 'ஜனநாயகன்'. எச்.வினோத் இயக்கிய இப்படம் ஜூலை 23-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
வெளியீட்டுக்கு முன்பும், வெளியான பிறகும் பல்வேறு சவால்களை 'ஜனநாயகன்' திரைப்படம் சந்தித்தது. குறிப்பாக, படம் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது. இருப்பினும், விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று படத்தைக் கொண்டாடினர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. உலகளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகி 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு சென்னையில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு படத்தை உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
படத்தின் தொடக்கத்தில் இடம்பெற்ற விஜய்யின் 'தமிழ்நாடு முதலமைச்சர்' என்ற டைட்டில் கார்டு திரையிடப்பட்டபோது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். அந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, விஜய்யின் டைட்டில் கார்டு 8 முறை மீண்டும் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் திரையரங்கமே ரசிகர்களின் கொண்டாட்டத்தால் களைகட்டியது.