

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்கள் பலரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்டார். சில தினங்களுக்கு முன்பு, விஜய் கவர்னரை சந்திக்க செல்லும்போது, இவரும் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் பற்றியும் பேசியிருக்கிறார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவரின் வெற்றியை எதிர்பார்த்துதான் நாங்கள் ‘ஜனநாயகன்’ என்ற தலைப்பைப் படத்திற்கு வைத்தோம். எல்லோரும் ‘ஜனநாயகன்’ என்பது ஒரு திரைப்படம் என்று நினைத்தார்கள். ஆனால் இப்போது அவர் தமிழ்நாட்டின் ‘ஜனநாயகன் ஆகிவிட்டார்’ என்றார்,
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் பற்றி, “நாங்கள் சென்சார் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம். சான்றிதழ் கிடைத்தவுடன் படத்தை வெளியிடுவோம். தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் சாருக்கு எனது வாழ்த்துகள். ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. விஜய் சார் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.