‘ஜனநாயகன்’ ரிலீஸ்? - சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம் இன்று முடிவு

'ஜனநாயகன்' திரைப்படம் அண்மையில் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது.
‘ஜனநாயகன்’ ரிலீஸ்? - சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம் இன்று முடிவு
Published on

சென்னை,

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன். இந்த திரைப்படத்தில் ராணுவம் சார்ந்த காட்சிகள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கவில்லை. இந்த படத்தை மறுஆய்வு கமிட்டிக்கு பரிந்துரை செய்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 'ஜனநாயகன்' படத்தை தயாரித்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்து மீண்டும் வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது.

இதன்படி தனி நீதிபதி முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்ப பெற்றது. 'ஜனநாயகன்' படம் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வு குழு பரிசீலனையில் இருந்தது. இந்தசூழ்நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் அண்மையில் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தில் இருந்து படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தல் 23-ந்தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது குறித்து முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி, ‘ஜனநாயகன்’ படத்தை கடந்த 24-ந்தேதி பார்த்த தணிக்கை குழுவினர், தங்களது முடிவை திங்கட்கிழமை(இன்று) தெரிவிப்பதாக தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து இன்று தணிக்கை வாரியம் இன்று தனது முடிவை தெரிவிக்கும் பட்சத்தில் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com