

கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் நம்மை சினிமா கைவிடாது என்று நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி, பாலிவுட் சென்றும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த நடிகை ஜான்வி கபூர், தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.
இந்தி தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் ஜான்வி கபூர் தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தனது திரைப்பயணம் குறித்து ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சினிமா என்பது என் ரத்தத்தில் ஏறிய ஒன்று. தாயார் வழியில் நானும் சினிமாவில் களமிறங்கினேன். இப்போது எனக்கு எல்லாமே சினிமாதான் என்றாகி விட்டது. ஒவ்வொரு நாளும் சினிமாவில் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் இந்த சினிமா நம்மை கைவிடாது என்று உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் இந்த சினிமாவுக்கு உண்மையாகவே இருக்கிறேன்.
என்னை பொறுத்தவரை நான் விமர்சனங்களுக்கு என்றுமே பயந்தது கிடையாது. என்னை பற்றிய நேர்மறையான விமர்சனங்களையும், எனக்கான அறிவுரைகள் கொண்ட விமர்சனங்களையும் தலைவணங்கி ஏற்பேன். அதேவேளை திட்டமிட்டு வரும் தனிநபர் விமர்சனங்களை நான் ஏற்கவே மாட்டேன். எனவே விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்லை.
என்னை பொறுத்தவரை நடிக்கும் அத்தனை படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவே விரும்புகிறேன். கதைகளையும் அவ்வாறே தேர்வுசெய்து நடித்து வருகிறேன். சினிமா பிரபலம் என்பதற்காகவே விமர்சித்து பேசி, மகிழ ஒரு கூட்டம் உண்டு. அது எனக்கு நன்றாகவே தெரியும். எனவே அவர்களை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. நான் என் கடமையை செய்கிறேன். நான் யார் என்பது என்னை பற்றி உணர்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.