

சென்னை,
“ஒரு பெண் டிஜிட்டல் முறையில் அவமதிக்கப்படும்போது, மற்றொரு பெண்ணாக நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏஐ மூலம் உருவாக்கப்படும் இதுபோன்ற மார்பிங் வீடியோக்களை வெளியிடுவது வெட்கக்கேடானது என குஷ்பு பதிவிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபல நடிகைகளின் முகங்களை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், மிருணாள் தாக்கூர், பிரீத்தி ஜிந்தா, தபு உள்ளிட்ட பலரின் முகங்களை பயன்படுத்தி டீப்-பேக் (Deepfake) உள்ளடக்கங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் ஆள்மை உரிமையும், நற்பெயரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டீப்-ஃபேக் மற்றும் டிஜிட்டல் ஆள்மாறாட்டத்திற்கு எதிராக ஏற்கனவே பல பிரபலங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் இணைந்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியாகி வெற்றி கண்ட படம், 'தேவரா'. இந்த படத் தில் வரும் 'சுட்டமல்லி...' என்ற பாடல் பெரிய அளவில் 'ஹிட்'டானது. பாடலில் ஜான்வி கபூர் கவர்ச்சியில் கலக்கியிருப்பார். இந்தப் பாடல் காட்சிகளை சிலர் ஏ.ஐ. மூலமாக 'மார்பிங்' செய்து ஆபாசம் தெறிக்கும் வகையில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அந்த வகையில், நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு நடிகை ஜான்வி கபூருக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு பெண் டிஜிட்டல் முறையில் அவமதிக்கப்படும்போது, மற்றொரு பெண்ணாக நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏஐ மூலம் உருவாக்கப்படும் இதுபோன்ற மார்பிங் வீடியோக்கள் நகைச்சுவையோ, பொழுதுபோக்கோ அல்ல, இது கொடூரமானதும், துஷ்பிரயோகமானதும், மிகவும் வெட்கக்கேடானதுமாகும். இதை உருவாக்குபவர்கள், தெரிந்தே பகிர்பவர்கள் மற்றும் திட்டமிட்டு பரப்புபவர்கள் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும், பெண்களுக்கு எதிரான ஆயுதமாக ஏஐ ஒருபோதும் பயன்படுத்தப்படக்கூடாது, ஜான்வி கபூர் நான் உங்களுடன் நிற்கிறேன், வலிமையாக இருங்கள்.” என அதில் தெரிவித்துள்ளார்.