

சென்னை,
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், மலையாள மொழியில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். பல மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், மலையாளம் தனக்கு மிகவும் சவாலான மொழியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய ஜான்வி கபூர், “மலையாளம் மிகவும் அழகான மற்றும் இனிமையான மொழி. ஆனால் அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதனால் தற்போதைக்கு மீண்டும் மலையாள திரைப்படத்தில் நடிக்கும் திட்டம் இல்லை” என்று கூறினார்.
மலையாளத்தை விட தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் தனக்கு ஓரளவு பரிச்சயமானவை என்று ஜான்வி தெரிவித்தார்.
“எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் நன்கு புரிகின்றன. அதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை மிகவும் ரசிக்கிறேன். அதேபோல் தமிழ் சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது” என்று அவர் கூறினார்.
கடந்த 2024-ம் ஆண்டு ’தேவரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஜான்வி, பின்னர் ’பரம் சுந்தரி’படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார்.
இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கத்தில் ஜான்வி கபூர் தற்போது நடித்துள்ள ’பெத்தி’ திரைப்படம் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து மற்றும் போமன் இரானி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2018-ஆம் ஆண்டு ’தடக்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜான்வி கபூர், பின்னர் குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள், மிலி மற்றும் ஹோம்ப்வுண்ட் போன்ற படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்றார். குறிப்பாக சமூக பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான ஹோம்ப்வுண்ட் திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.