'தளபதி' படத்தில் நான் நடிக்க வேண்டியது.. வருத்தப்பட்டு பேசிய ஜெயராம்

அந்த வாய்ப்பை தவறவிட்டது இன்றும் வருத்தமாகத்தான் இருக்கிறது என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
'தளபதி' படத்தில் நான்  நடிக்க வேண்டியது.. வருத்தப்பட்டு பேசிய ஜெயராம்
Published on

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு வெளியான 'தளபதி' திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகும். ரஜினிகாந்த், மம்மூட்டி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் மூலம் அரவிந்த்சாமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் கம்பீரமாகவும், ரஜினிகாந்தின் தம்பியாக உணர்வுப்பூர்வமாகவும் நடித்த அவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

முதலில் என்னிடம்தான் பேசினார் மம்மூட்டி

இந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வாய்ப்பு தனக்கே கிடைத்ததாக நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தளபதி படத்தில் அரவிந்த்சாமி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நான்தான் நடிக்க இருந்தேன். அந்த வாய்ப்பு குறித்து முதலில் என்னிடம் பேசியவர் மம்மூட்டிதான். தொடர்ந்து மூன்று மாதங்கள் கால்ஷீட் தேவைப்பட்டதால், அப்போது மலையாள திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்த நான் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை" என்றார்.

தவறவிட்ட வாய்ப்பு வருத்தம்தான்

மேலும் பேசிய ஜெயராம், "ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டியுடன் பல முக்கிய காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தேதிகள் ஒத்துவராததால் அந்த வாய்ப்பை இழந்தேன். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்தார். அந்த வாய்ப்பை தவறவிட்டது இன்றும் வருத்தமாகத்தான் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

ஜெயராமின் இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'தளபதி' திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com