

சென்னை,
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'தகப்பன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சொக்க வச்சாலே' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
'கிடா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தகப்பன்'. இதில் ஜீவா கதாநாயகனாகவும், ரஜிஷா விஜயன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 'மாமன்', 'கருடன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அப்பா - மகன் இடையேயான உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. மதுரை மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்புக் கோவிலில் படப்பிடிப்பு தொடங்கியது. அதே இடத்தில் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றது. படத்தின் முழுப் படப்பிடிப்பும் 40 நாட்களில் நிறைவடைந்ததாகப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இப்படத்தின் முதல் பாடலான 'தங்கப்புள்ள' வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, செகண்ட் சிங்கிளான 'சொக்க வச்சாலே' இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், 'தகப்பன்' திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.