

இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல இலக்கியத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதாக ஞானபீட விருது கருதப்படுகிறது. எழுத்தாளர் தன் வாழ்நாளில் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டு வருகிறது
இந்த விருது 1962ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிகவும் பழமையான இலக்கிய விருதுகளில் இதுவும் ஒன்று. டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தை சேர்ந்த, சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட பாரதிய ஞானபீடம் அறக்கட்டளைதான் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அகிலனின் ‘சித்திரப்பாவை’ படைப்புக்கு 1975ம் ஆண்டு ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு 2002ம் ஆண்டு ஜெயகாந்தன் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. எண்ணற்ற தகுதி வாய்ந்த எழுத்தாளர்கள் இருக்கும் போதிலும் 1965ஆம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமே ஞானபீட விருதைப் பெற்றுள்ளனர். தற்போது உருது, சமஸ்கிருத எழுத்தாளர்களுக்கு ஞான பீட விருது வழங்கப்பட்ட நிலையில், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் எழுத்தாளர் ஒருவருக்குக் கூட கடந்த 24 ஆண்டுகளாக வழங்கப்படாதது கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீடம் விருதை பெறும் 3வது தமிழர் என்கிற பெருமையை வைரமுத்து பெறுகிறார்.
வைரமுத்து இதற்கு முன்னர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி, கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற விருதுகளையும், 7 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.