நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டியதில்லை - “கருப்பு” பட வழக்கில் ஐகோர்ட் கருத்து

‘கருப்பு’ படத்தில் நீதித்துறை அவம‌திக்கப்பட்ட‌தாக தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டியதில்லை - “கருப்பு” பட வழக்கில் ஐகோர்ட் கருத்து
Published on

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.

‘கருப்பு’ படத்தில் நீதித் துறையை அவமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, திரையரங்குகளில் படத்தைத் தடையிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதிகள் அமர்வு கூறியதாவது, ‘கருப்பு’ திரைப்படத்தின் கதைக்களம் என்பது ஏழு கிணறு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு நீதிமன்றம், அதில் இருக்கும் தலைமை நீதிபதி ஊழல்வாதியாகவும், தொழில் நெறிமுறையற்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மீது அளவற்ற அதிகாரத்தைச் செலுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. நீதித் துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊழல் நீதிபதிகள் இருந்தார்கள், இருக்கவும் செய்கிறார்கள். நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை.

நீதித் துறையில் ஊழல் என்ற கூற்றுகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்க மறுக்கிறோம். நீதித் துறை ஊழல் நிகழ்வுகளை அறிவோம், எதிர்கொண்டும் இருக்கிறோம். சென்னை ஐகோர்ட்டின் முழு அமர்வும் இதுபோன்ற கறுப்பு ஆடுகளை தவறாமல் வெளியேற்றிக் கொண்டுதான் உள்ளது. வழக்கறிஞர்கள் சங்கத்தின் சில உறுப்பினர்களுக்கு ஊழல்வாதிகளுடன் தொடர்பில்லாமல், நீதித் துறையில் ஊழல் நிகழ முடியாது. ஊழல்வாதிகளைப் பிடிப்பதற்கும், நிலைமையை உரிய முறையில் கையாளுவதற்கும் உயர் நீதிமன்றத்தின் விழிப்புணர்வு கண்காணிப்பே ஆதாரமாக விளங்குகிறது.

‘கருப்பு’ படத்தை எங்களில் ஒருவரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்த்துள்ளார். ஒரு நெறிமுறையற்ற வழக்கறிஞருக்கும், ஊழல் நீதிபதிக்கும் இடையிலான தீய கூட்டணியை கொண்ட கருப்பு திரைப்படத்தில், நீதித் துறை அமைப்பு மிகைப்படுத்தி சித்திரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், தமிழ்த் திரையுலகில் திரைப்படங்கள் அப்படித்தான் பார்க்கப்படுகின்றன. தன்னைச் சூழ்ந்திருக்கும் டஜன் கணக்கான வில்லன்களை கதாநாயகன் தனி ஒருவனாக வீழ்த்துவதுபோல. தமிழ் சினிமாவில் எல்லாமே மிகை உணர்ச்சி கொண்டது. எனவே, கருப்பு படத்தையும் ஒரு தனித்துவமான படைப்பாகவே பார்க்க வேண்டும்.

ஒரு கலைஞர் தனது சொந்த வழியில் தன் படைப்பை வழங்கும் உரிமையே, கலைச் சுதந்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கலைப் படைப்பு முற்றிலும் வேறுபட்ட தராசில் எடையிடப்படும். ஒரு கலைஞருக்கு அதிக செல்வாக்கும் சுதந்திரமும் உண்டு. ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு எது பொருந்துமோ, அது ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் பொருந்தும். அவர் வழங்கும் கதையில் மிகைப்படுத்தல் இருக்கும். தவறுகள் இருக்கும். அது முற்றிலும் புனைகதையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு செய்தியைக் கொண்டிருக்கலாம் அல்லது பொழுதுபோக்குடன் மட்டும் நின்றுவிடலாம். ஒரு கதையை வழங்கும் விதமும், வழங்கும் உள்ளடக்கமும் படைப்பாளியிடமே விடப்பட வேண்டும். தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் படைப்பாளி நுழையாத வரை, படைப்பாற்றல் மதிக்கப்பட வேண்டும்.

கருப்பு படத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, கதாநாயகன் சூர்யா, நடிகை திரிஷா ஆகியோர் நீதித்துறை அமைப்பை அவமதித்துள்ளதால், அதை குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி, தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று மனுதாரர் தமிழ்வேந்தன் தரப்பில் வாதிடப்பட்டாலும், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆர்.கே. நாராயணனின் படைப்புகளில் மால்குடி என்பது ஒரு கற்பனைக் கிராமமாக இருப்பது போலவே, கருப்பு படத்தின் ஏழு கிணறு நீதிமன்றமும் ஒரு கற்பனையானதாகும். ஒரு கற்பனையான நீதிமன்றத்துக்குத் தலைமை தாங்கும் நபர் ஊழல்வாதியாகச் சித்திரிக்கப்படும்போது, அது 1971-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் உள்ள தண்டனை விதிகளின்கீழ் வராது. அவ்வாறு கற்பனையாகச் சித்திரிக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஊழல் என இயக்குநர் கூறியுள்ளாரே தவிர, ஒட்டுமொத்த நீதித் துறை அமைப்பையே ஊழல் நிறைந்ததாகச் சித்திரிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, கருப்பு படத்தை தடை செய்யக் கோரிய வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com