'நகைச்சுவையில் குதித்தேன், வாழ்க்கையை தொலைத்தேன்' - நடிகை ஷர்மிளி வேதனை

'நகைச்சுவையில் குதித்தேன், வாழ்க்கையை தொலைத்தேன்' - நடிகை ஷர்மிளி வேதனை
Published on

'ஆவாரம்பூ', 'மாப்பிள்ளை வந்தாச்சு', 'சேரன் பாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் கவுண்டமணியுடன் நகைச்சுவையில் கலக்கியவர், ஷர்மிளி. ஆவாரம்பூ படத்தில் கவுண்டமணி-பயில்வான் ரங்கநாதனுடன் ஷர்மிளியின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிக்கும்படியாக இருக்கும். மலையாள படங்களில் நடித்து வரும் ஷர்மிளி சமீபத்தில் தனது திரைபயணம் குறித்து மனம் திறந்தார்.

அப்போது, நகைச்சுவை வேடங்களில் நடித்ததால் வாழ்க்கையை தொலைத்ததாக ஷர்மிளி வேதனை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

சினிமாவில் 'டான்சர்' ஆக இருந்த எனக்கு ஒருகட்டத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. நடிப்பு ஆசை எனக்குள்ளும் இருந்தது. ஆனால் நகைச்சுவை வேடங்களில் நடித்ததால் நான் என் எதிர்காலத்தை தொலைத்துவிட்டேன். கவுண்டமணியுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்கி இருக்கிறேன். பிரபலமும் ஆனேன். ஆனால் நகைச்சுவை வேடங்களில் நடித்த படங்களுக்காக, தேடி வந்த பல பெரிய படங்களின் வாய்ப்புகளை தவறவிட்டேன்.

கவர்ச்சி கலந்த நகைச்சுவை எனக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. ஆனால் ஒருகட்டத்தில் நான் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர் ரோலில் நடித்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. ஒருவேளை அதை செய்திருந்தால் நான் இன்றைக்கு இன்னும் பேசப்பட்டிருப்பேன். ஒரு காமெடி படத்துக்காக, தெலுங்கில் சிரஞ்சீவியின் 'முட்டா மேஸ்திரி' பட வாய்ப்பை தவறவிட்டேன். எனக்கு பதிலாக சில்க் ஸ்மிதா நடித்தார். அந்த பாடலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். இப்படி காமெடியால் நான் சினிமாவில் இழந்தது அதிகம்.

இவ்வாறு ஷர்மிளி வேதனை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com