

சென்னை,
ஜேசன் சஞ்சய் என்னிடம் கதை சொன்ன விதம், விஜய் அண்ணாவுடன் பேசியது போலவும், அவருடன் இருந்த மாதிரி உணர்வும் எனக்கு ஏற்பட்டது என சிக்மா பட விழாவில் நடிகர் சூரி பேசினார்.
நடிகரும் தமிழக முதல் அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'சிக்மா'. லைகா புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சுதீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வைரலானது.
இந்த நிலையில், சென்னையில் 'சிக்மா' திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், என்னோட அம்மாவுக்கு நன்றி..என்னோட அப்பா இன்னைக்கு முதல் அமைச்சர்..அவருக்கு நன்றி.. என்னோட தங்கை திவ்யா சாஷா அவளுக்கும் ரொம்ப நன்றி” என்றார்.
அதனை தொடர்ந்து அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி, விஜய் அண்ணாவை போல...
“'சிக்மா' படத்தின் கதையை ஜேசன் சஞ்சய் இரண்டரை மணி நேரம் தொடர்ந்து என்னிடம் விவரித்தார். அவர் கதை சொன்ன விதம், விஜய் அண்ணாவுடன் பேசியது போலவும், அவருடன் இருந்த மாதிரி உணர்வும் எனக்கு ஏற்பட்டது. ஜேசன் சஞ்சய் இயக்குநராக வெற்றி பெற வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும். இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும். என்று பேசினார்.