

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா, யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, "மட்டாஞ்சேரி சுகுமாரன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் இந்திரன்ஸ் தனது இயல்பான நடிப்பால் பாராட்டுகளை குவித்து வருகிறார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘கருப்பு’ திரைப்படம், திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் இந்திரன்ஸ், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ திரைப்படத்தில் சிறிய காட்சியில் நடித்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “விஜய் சார் பலராலும் கொண்டாடப்படும் ஒரு மாபெரும் நடிகர். அவருடன் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதேபோல் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிப்பதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனால் அந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டேன்” என்றார்.
விஜய் மற்றும் ஷங்கர் மீதான தனது மரியாதையையும், அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள இந்திரன்ஸின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.