

சென்னை
பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி டுவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், வீடியோ ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு என பதிவிட்டு அந்த வீடியோவை கமல் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஐயா.. என் பெயர் கமல்ஹாசன். நான் உங்கள் குடிமகன். எனது பாரத பிரதமருக்கு ஒரு திறந்த வேண்டுகோள் வீடியோ. தமிழகத்தில் தற்போது நிலவும் நிலை தாங்கள் அறிந்ததே. தமிழக மக்கள், நீதிக்காக போராடி கொண்டிருக்கிறார்கள். நீதி கிடைத்தாயிற்று. அதை செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும் பண்டிதர்களும் இந்த கால தாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என நம்ப தொடங்கிவிட்டார்கள். அது ஆபத்தானது மற்றும் அவமானகரமானதும் கூட. தமிழக-கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தாக வேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்த வேண்டியது எனது உரிமை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பீர்கள் என
நம்புகிறேன். இதில் சொல்ல தவறியதை உங்களுக்கு கடிதமாகவும் அனுப்பியுள்ளேன். வாழ்க இந்தியா என அந்த வீடியோவை முடித்துள்ளார்.