மண்டோதரியாக காஜல் அகர்வால்... 'ராமாயணம்' படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியீடு!

'ராமாயணம்' படத்தில் நடிகை காஜல் அகர்வால், ராவணனின் மனைவியான மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மண்டோதரியாக  காஜல் அகர்வால்... 'ராமாயணம்' படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியீடு!
Published on: 

சென்னை,

நடிகை காஜல் அகர்வால், 'ராமாயணம்: தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படத்தில் மண்டோதரியாக நடித்தபோது எடுக்கப்பட்ட படப்பிடிப்புத் தள புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மண்டோதரியாக காஜல் அகர்வால்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'ராமாயணம்: தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்'. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும், சன்னி தியோல், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ராவணனின் மனைவியான மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு குறைவான நேரமே ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவரது தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படத்தின் முக்கியத்துவம் குறித்து காஜல்

இந்நிலையில், மண்டோதரியாக நடித்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் தனது அனுபவம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அதில், "ஒரு கதாபாத்திரத்தின் நீளத்தையோ, திரையில் தோன்றும் நிமிடங்களையோ வைத்து சில திரைப்படங்களின் மதிப்பை அளவிட முடியாது. அந்தக் கதையின் பிரம்மாண்டம், அதன் உருவாக்கத்திற்குப் பின்னால் இருக்கும் அர்ப்பணிப்பு மற்றும் நமது நம்பிக்கையுடனும் கலாசாரத்துடனும் ஆழமாகப் பிணைந்த ஒரு படைப்பில் இடம்பெறும் வாய்ப்பு ஆகியவையே முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தன்னுடன் நடித்த ரகுல் ப்ரீத் சிங், விவேக் ஓபராய், அதிநாத் கோத்தாரி உள்ளிட்ட கலைஞர்களுடனான அனுபவமும் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறியுள்ளார். படத்தின் ஆடை வடிவமைப்புக் குழுவினர் மற்றும் உதவி இயக்குநர்களின் உழைப்பையும் பாராட்டியுள்ளார்.

"சில திரைப்படங்கள் ஒரு கதாபாத்திரத்தின் அளவை விடப் பெரியவை. 'ராமாயணம்' திரைப்படம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு அனுபவமாக என்றும் இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

X