திரையுலகில் ஊதிய பாகுபாடு - நடிகை காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கம், நேரத்தை சரியாக கடைபிடித்தல் ஆகியவற்றுடன் பெண்களுக்கு மிகுந்த மரியாதையும் அளிக்கப்படுகிறது என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் ஊதிய பாகுபாடு -  நடிகை காஜல் அகர்வால்
Published on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு அவ்வப்போது மட்டுமே சினிமாவில் தலைகாட்டி வருகிறார். ‘இந்தியன்-3’ படத்தில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது ‘ராமாயணா’ படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவின் முன்னணி நடிகையாக கோலோச்சிய காஜல் அகர்வால், தற்போது மீண்டும் பிசியான நடிகையாக மாற துடிக்கிறார். பெரிய நடிகர்களின் படங்களில் இணையவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பட விழாக்களில் படு கவர்ச்சியாக உடை அணிந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

திரைத்துறையில் ஆண் மற்றும் பெண் நடிகர்களின் ஊதிய வித்தியாசம் மிகப் பெரியது என்றும் அவை மாற்றப்பட வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “தற்போது, திரையுலகில் ஆண் மற்றும் பெண் நடிகர்களுக்கு இடையே நிலவும் ஊதிய பாகுபாடு குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து இன்னும் பல நடிகர்கள் பேசுவார்கள் என்று நம்புகிறேன். ஊதிய பாகுபாடு இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்த நிலை மாற வேண்டும். மாற்றங்கள் மெதுவாக நடந்து வருகின்றன. திரைத்துறை இப்போது பெருமளவில் கார்ப்பரேட் மயமாகி விட்டது.

இது ஆட்டத்தின் விதிகளையே மாற்றியிருக்கிறது. இருந்தாலும்,ஆண் மற்றும் பெண் நடிகர்களின் ஊதியத்துக்கு இடையே இருக்கும் வித்தியாசம் மிகப்பெரியது. எனக்குத் தென்னிந்தியத் திரைத்துறை மீது கூடுதல் ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் அங்குதான் நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினேன். அங்கு ஒன்பது மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை. பாலிவுட்டில் எனக்குக் கிடைக்காத ஒருவித சவுகரியம் தென்னிந்திய சினிமாவில் கிடைக்கிறது. ஒழுக்கம் மற்றும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் ஆகியவற்றுடன், பெண்களுக்கு மிகுந்த மரியாதையும் அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com