

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் நேற்று வெளியாகவில்லை. சூர்யாவின் படத்தை கொண்டாடி தீர்க்கலாம் என்று கருப்பு சட்டை அணிந்து நேற்று காலை முதலே ஆர்வமாக தியேட்டரை நோக்கி படையெடுத்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையில் 'கருப்பு' படம் ரிலீசாகாத விரக்தியில் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.
அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு ‘கருப்பு’ திரைப்படம் இன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னை ரோகினி தியேட்டரில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து நடிகை திரிஷா, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பார்த்து ரசித்தனர். அப்போது சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியும் உடனிருந்தார்.
இதற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன், தனது எக்ஸ் பக்கத்தில், “தம்பி சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.