

சவுகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சவுகார் ஜானகியின் வயது 94. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சவுகார் ஜானகி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், சவுகார் ஜானகி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில் “ ‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சவுகார் ஜானகி. அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்” என்று கூறியுள்ளார்.