'அவர் சினிமாவுக்கு கிடைத்த பரிசு' - முன்னணி தமிழ் நடிகரை கூறிய நானி
நானி நடித்துள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வரும் 29-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தெலுங்கு சினிமாவின் 'நேச்சுரல் ஸ்டார்' என்று அழைக்கப்படுபவர் நடிகர் நானி. இவர் நடித்த 'அந்தே சுந்தரானிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயாவுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்திற்கு தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இப்படம் வரும் 29-ந் தேதி(நாளை மறுநாள்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் நானி ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது சினிமாவில் அவரை ஊக்கப்படுத்திய நடிகர் குறித்து கேட்டபோது, அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசனை கூறினார். அவர் கூறுகையில்,
'கமல்ஹாசன் சார். அவர் சினிமாவுக்குக் கிடைத்த பரிசு என்று நினைக்கிறேன். நடிப்பில் மட்டுமில்லாமல் சினிமாவின் பல துறைகளில் அவர் சிறந்து விளங்குகிறார். சினிமாவுக்காக தனது வாழ்க்கையை கொடுத்துள்ளார். 5 வயதில் சினிமா வாழ்க்கையை துவங்கிய அவர், இன்றும் முன்னணி நடிகராக இருக்கிறார். பல பிரமாண்டமான படங்கள் அவரிடம் இருக்கின்றன. இது போன்றவை உடைக்க முடியாதவை என்று நினைக்கிறேன், ' என்றார்.