பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்: மோகன்லாலுக்கு வாழ்த்து கூறிய கமல்

நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்: மோகன்லாலுக்கு வாழ்த்து கூறிய கமல்
Published on

தமிழில், 'இருவர்', 'உன்னை போல ஒருவன்','ஜில்லா', 'காப்பான்' போன்றபடங்களில் நடித்திருந்தாலும்,'ஜெயிலர்' படத்தில் நடித்த காட்சிகள் நிறைய கைதட்டல்களையும் விசில்களையும் மோகன்லாலுக்குப் பெற்று தந்தது. கேரள மண்ணில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகஅசைக்க முடியாத 'தம்புரானாக'வீற்றிருக்கும் அவர், 'லாலேட்டன்'என்று ரசிகர்களால் அன்புடன்அழைக்கப்படுகிறார்.

1978-ல் இயக்குநர் பாசிலின் முதல் படமான 'மஞ்சில் விரிஞ்ஞ பூக்கள்' படத்தில் வில்லனாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். முக்கியமாக, கேரள சினிமாவின் முன்னோடிகளாகக் கருதப்படும் ஜி. அரவிந்தன், எம்.டி. வாசுதேவன் நாயர், பரதன், லோகிததாஸ் போன்ற திரைக்கதையாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர்கள் உருவாக்கிய தனித்துவமான பல கதாபாத்திரங்களில் நடித்தபின்பே மோகன்லாலின் புகழ் அதிகரித்தது.

தற்போது வரை, 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்த நாயகர்களில் ஒருவராகவும் உள்ளார். இந்த நிலையில், இன்று மோகன்லாலின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில்  "கடும் விமர்சனமும் பகுத்தறிவும் உள்ள ரசிகர்கள் மத்தியில் 40 ஆண்டுகளாக முன்னணி நாயகனாக இருக்கிறார். 400 திரைப்படங்களா? சிலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். நான், அவர் 500 படங்களில் நடித்து பிரேம் நசீரின் சாதனையை முறியடிப்பதை எதிர்நோக்கியிருக்கிறேன். இந்தப் பிறந்தநாளில் என் வாழ்த்தும் அதுதான். பல சாதனைகளை முறியடிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருங்கள் மோகன்லால்" எனப் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'உன்னைப்போல் ஒருவன்' என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com