விஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு 2 படங்களை முடித்ததும் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம்

விஸ்வரூபம்-2, சபாஷ்நாயுடு படங்களின் படப்பிடிப்புகளை முடித்து விட்டு நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.
விஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு 2 படங்களை முடித்ததும் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம்
Published on

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகளில் தீவிரமாகி உள்ளார்.

பாதியில் நின்றுபோன விஸ்வரூபம்-2, சபாஷ்நாயுடு ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளில் அவர் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்து விட்டு அவர் அரசியலில் குதிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்துக்குள் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் தமிழ் புத்தாண்டில் அரசியல் கட்சியை அறிவிப்பார் என்றும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

விஸ்வரூபம்-2

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை அதன் முதல் பாகம் வெளியான 2013-ஆம் ஆண்டிலேயே கமல்ஹாசன் பெருமளவு முடித்து விட்டார். அந்த வருடம் இறுதியில் விஸ்வரூபம்-2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு நிதிநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமாகி நின்றுபோனது.

இதுபோல் 2008-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய தசாவதாரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து இருந்த பல்ராம்நாயுடு கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அந்த பெயரை தொடர்புபடுத்தி சபாஷ் நாயுடு என்ற புதிய படம் தயாரானது. இதில் கமல்ஹாசன், சுருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.

காலில் முறிவு

முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தபோது படத்தின் டைரக்டர் ராஜீவ் குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் கமல்ஹாசனே படத்தை இயக்கினார். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியதும் வீட்டு மாடி படிக்கட்டில் இருந்து கமல்ஹாசன் தவறி விழுந்து அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பும் பல மாதங்களாக நின்று போனது.

2 படங்களின் படப்பிடிப்புகளை முடிக்கும் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு உள்ளார். இந்த படங்கள் வெளியானபிறகு அரசியல் கட்சியை அறிவித்து விட்டு சில மாதங்கள் இடைவெளி விட்டு, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com