

கமல் ஹாசன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படம் உருவாகி வருகின்றது.
தமிழ் திரையுலகின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில் இணைவதால், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இந்த படத்தில் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கமல் ஹாசன் தயாரித்து நாயகனாக நடிக்கும் மற்றொரு புதிய படத்தை, இயக்குநர் சு. அருண் குமார் இயக்குகின்றார். இவர் சித்தா, வீரதீர சூரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட அறிவிப்புகள் வரும் நவம்பர் 6ம் தேதி மாலை வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
காவல்துறை சார்ந்த படமாக இருக்கக் கூடும் எனக் கருதப்படும் இந்தப் படத்தின் லுக் டெஸ்ட் எடுத்த புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
நடிகர் கமல் ஹாசன் வரும் 7ம் தேதி தனது 72 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள நிலையில், இந்தப் புதிய படத்தின் அப்டேட் வெளியாவது குறிப்பிடத்தக்கது.