“காந்தாரா சாப்டர் 1” காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் - படக்குழு வேண்டுகோள்


“காந்தாரா சாப்டர்  1” காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் - படக்குழு வேண்டுகோள்
x

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் மக்களிடையே நல்ல வரபேற்பை பெற்றுவருகிறது.

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா - சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மனி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படக் காட்சிகள் எதையும் யாரும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் ரிஷப் ஷெட்டி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதொரு பதிவில் “திருட்டுத்தனமாக விடியோக்கள் பகிரப்படுவதை ஊக்குவிக்க வேண்டாமென உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். திருட்டுத்தனமாக விடியோக்கள் பகிரப்படுவதால், ஒரு திரைப்படம் பாதிப்பைச் சந்திப்பதுடன் மட்டுமில்லாது, தங்கள் கனவுகளுக்கு உயிரூட்ட கடுமையாக உழைத்துள்ள ஆயிரக்கணக்கானோரின் உழைப்பும் பாதிக்கப்படுகிறது.‘காந்தாரா சாப்டர் - 1’ உங்களுக்காகவே பிரத்யேகமாக அதன் ஒலி, காட்சி, அதிலுள்ள உணர்ச்சி ஆகிய ஒவ்வொன்றையும் பெரிய திரையில், அதாவது திரையரங்குகளுக்காகவே உருவாக்கப்பட்டது.ஆகவே, ரசிகர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது இதைத்தான்... திரையரங்குகளில் படத்தை படம்பிடித்து அதன்பின் அந்த விடியோக்களை பகிர வேண்டாம்! சினிமாவிடம் இருக்கும் மேஜிக்கை இந்தச் செயல் பறித்து விடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story