கயாடு லோகருக்கு 'கண்திருஷ்டி' - அடுத்தடுத்து கைவிட்டுப்போன 2 படங்கள்

டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் திரை உலகில் பார்வை கயாடு லோகர் பக்கம் திரும்பியது.
சென்னை,
டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் கயாடு லோகர். படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தமிழ் திரை உலகின் பார்வை கயாடு லோகர் பக்கம் திரும்பியது. இதயம் முரளி படத்தில் அதர்வா ஜோடியாகவும், இம்மார்ட்டல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகவும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இது மட்டுமின்றி பார்க்கிங் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த 49-வது படத்தில் அவருக்கு கதாநாயகியாகவும், விக்னேஷ்ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்திலும் கயாடு லோகர் நடிப்பதாக இருந்தது. இதையொட்டி, குறுகிய கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் 'குயின்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் கயாடுலோகர். யார் கண்பட்டதோ தெரியவில்லை. சிம்பு மற்றும் தனுசுடன் அவர் நடிக்க இருந்த 2 படங்களும் கைவிட்டு போனது.
தனுஷ் படத்தில் கயாடு லோகருக்கு பதில் மமிதா பைஜு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.
2 படங்களும் கைவிட்டு போன நிலையில் கயாடு லோகர் மலையாள படமொன்றில் டொவினோ தாமசுடன் இணைந்து நடித்து வருகிறார். கல் 'அடி' பட்டாலும் கண் 'அடி' படக் கூடாது என்பது சரிதான் போல.






