ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' வசதி அளிக்க வேண்டும்: நடிகை கங்கனா ரனாவத்

ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' -வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்.
Published on

மும்பை,

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் 'டுவிட்டர் புளூ' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

மாதம் 8 டாலர்கள் கட்டணத்துடன் 'டுவிட்டர் புளூ' வசதி பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறப்பு அம்சங்களை கொண்ட 'டுவிட்டர் புளூ' வசதி தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில் 'டுவிட்டர் புளூ' வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என இந்திய பயனாளர் இன்று டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்கை டேக் செய்து டுவிட்டரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், 'ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் டுவிட்டர் புளூ வசதி அறிமுகமாகும் என தெரிவித்தார்.

விளம்பரம் இல்லாத கட்டுரைகள், டுவிட்டர் செயலியின் நிறம், 'தீம்களை' மாற்றும் வசதி, டுவிட் செய்யப்படும்போது சிறிது கால அவகாசம் எடுத்து பயனாளர்கள் பகிரும் கருத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் வசதி, நீண்ட மற்றும் அதிக தரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதிகளையும் 'டுவிட்டர் புளூ'வின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்த முடிவை நடிகை கங்கனா ரனாவத் ஆதரவளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' -வசதி அளிக்கப்பட வேண்டும். இப்போது இருக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக டுவிட்டர் திகழ்கிறது. இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை. ஆகவே டுவிட்டர் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம், டுவிட்டர் விதிகளை தொடர்ந்து மீறியதற்காக கங்கனாவின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com