

நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரணாவத் . ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான ‘தலைவி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவான‘எமர்ஜென்சி’ படத்தில் நடித்திருந்தார்.
இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார் நடிகை கங்கனா ரணாவத். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், மறுபுறம் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தெலுங்கு இயக்குநர் ரவி பாபு இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் படத்துக்கு ‘ஸ்கேரி பிக்சர்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். இந்தப் படத்தை இயக்குநரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளையிங் பாக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் தயாரிப்பாளராக ராணா டகுபதியின் தந்தை சுரேஷ் பாபு இணைந்துள்ளார்.
ஸ்கேரி பிக்சர்’ படத்தின் அறிவிப்பு வீடியோவை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி வெளியிட்டுள்ளார். அதில் ‘கொடுங்கனவு விரைவில் அம்பலமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தேதி குறிப்பிடாமல் அடுத்தாண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் கங்கனா இரண்டு ஹாரர் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். முதலாவதாக 2009ல் ‘ராஜ்: தி மிஸ்டரி கன்டினிவ்ஸ்’, 2023ல் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக கங்கனா நடிப்பில் கடந்த ஜூன் 12ஆம் தேதி மனோஜ் தபாடியா இயக்கத்தில் ‘பாரத பாக்ய வித்தாத்தா’ என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதல் பற்றிய படமாக உருவாகியிருந்தது.
கங்கனா ரணாவத் நடித்து முடித்துள்ள ‘குயின்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்கிள்’ என்ற படம் வெளியாக இருக்கிறது. அதில் நடிகர் மாதவன் உடன் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.