கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு

நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?"கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு,
'நாயகன்' படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் 'தக்லைப்' படம் உருவாகி இருக்கிறது. வருகிற ஜூன் 5-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.இதன் பட விழாவில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார். அப்போது கமல்ஹாசன் பேசும்போது, ''ராஜ்குமாருடைய குடும்பம் கன்னடத்தில் இருக்கும் எனது குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது கன்னடம். அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார்'', என்று குறிப்பிட்டார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு, கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம் தெரிவித்து, 'கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை' என்று கூறியுள்ளார். அதேபோல் கர்நாடகா மாநிலத்தின் பா.ஜனதா தலைவர் விஜயேந்திராவும் கண்டனம் தெரிவித்து, 'கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்தநிலையில் 'தனது பேச்சு குறித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் 'தக்லைப்' படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்படும்', என்று அந்த மாநில கலாசாரத்துறை மந்திரி சிவராஜ் தங்கடக்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுதொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூர், பெலகாவி, மைசூர், ஹூப்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் உருவாகி இருக்கிறது. எலகங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் 'தக்லைப்' படத்தின் போஸ்டர்கள், பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேசி உள்ளார்.
எப்போதும் கன்னட மொழி மீது காதல் கொண்டவராக இருக்க வேண்டும். சர்ச்சை எழும்போது குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும். நட்சத்திர படங்களை மட்டும் ஆதரிக்காமல் புதியவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?"கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி எழுப்பினார். கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் பேசிய நிலையில் ஆதரவு தெரிவித்துள்ளார்.






