"ரெட்ரோ" படத்தின் "கண்ணாடி பூவே" பாடல் என் மனதுக்கு நெருக்கமானது - சந்தோஷ் நாராயணன்


“ரெட்ரோ” படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ கடந்த 13ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கண்ணாடி பூவே' என்ற லிரிக்கல் பாடல் கடந்த 13ம் தேதி வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்பாடலுக்கு விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணனே இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடல் சிறையில் இருக்கும் சூர்யா தன் காதலியை நினைத்துப் பாடுவது போல் அமைந்திருந்தது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிலையில் தற்போது அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கண்ணாடி பூவே பாடல் என் மனதுக்கு நெருக்கமானது. என்னுடைய சில படங்களில் நான் எப்போதும் இசையமைக்க விரும்பும் இசை வகை. நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. பொதுவாக கீழிருக்கும் இதுபோன்ற இசைக்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் போது கலைஞர்களுக்கு வேறு எதுவும் பெரிய மகிழ்ச்சியைத் தராது. இந்த அன்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நான் புதிதாக இசையமைக்கப் பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. நன்றியால் என் உள்ளம் நிறைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இப்பாடல் வெளியாவதற்கு முன்பு என்னுடைய நெருக்கமான பாடல் என நெகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ரெட்ரோ' படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது.

50 படங்களை கடந்து பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் தற்போது கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்', சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்', சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.


Next Story