"கரகாட்டகாரன்" படம் விரைவில் ரீ-ரிலீஸ் - ராமராஜன்


கரகாட்டகாரன் படம் விரைவில்  ரீ-ரிலீஸ்  -  ராமராஜன்
x
தினத்தந்தி 3 Jun 2025 4:03 PM IST (Updated: 3 Jun 2025 4:49 PM IST)
t-max-icont-min-icon

ஜூன் 16ம் தேதி 'கரகாட்டகாரன்' படத்துக்கு 36 வது பிறந்தநாள் என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா ஆகியோர் நடித்து 1989-ல் வெளியான படம் 'கரகாட்டக்காரன்'.தமிழ் வணிக சினிமாவின் கிளாஸிக்குகளில் கரகாட்டக்காரன் படத்துக்கு நீங்காத இடம் உண்டு. இந்த படத்தில் கோவை சரளா, சண்முகசுந்தரம், காந்திமதி, கவுண்டமணி மற்றும் செந்தில் எனப் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் அனைவராலும் விரும்பிக் கேட்கப்பட்டு கொண்டு வருகிறது. இந்த படம் ரூ. 35 லட்ச பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 450 நாட்களுக்கு மேல் ஓடி, ரூ 5 கோடி வசூலித்த சாதனையை படைத்தது. இதில் இடம்பெற்ற மாங்குயிலே, இந்த மான், குடகுமலை, மாரியம்மா, முந்தி முந்தி, ஊருவிட்டு ஊரு வந்து போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. கவுண்டமணி, செந்திலின் வாழைப்பழம் மற்றும் சொப்பன சுந்தரி கார் காமெடி இன்று வரை மீம்ஸ்களாக வலம் வருகின்றன.

வெளியாகி 36 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் இருப்பதாக கடந்த ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த படத்தில் நடித்த ராமராஜன் இரண்டாம் பாகம் எடுப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அந்த படத்தை அப்படியே விட்டுவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று இளையராஜாவின் பிறந்தநாளில் அவரை சந்தித்து ஆசி வாங்கிய ராமராஜன் "இன்று இளையராஜா அண்ணனின் பிறந்தநாள். ஜூன் 2 அவருக்குப் பிறந்தநாள். ஜூன் 16ம் தேதி கரகாட்டகாரன் படத்துக்கு 36வது பிறந்தநாள். அந்த படத்தை ரீ- ரிலீஸ் செய்வதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளோம். விரைவில் அது குறித்த செய்தி வரும்" எனக் கூறியுள்ளார்.

1 More update

Next Story