கார்த்தி படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்டனர்

கார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகள் நீக்கப்பட்டன. குற்றப்பரம்பரை வார்த்தையை பயன்படுத்தியதற்காக படக்குழுவினர் மன்னிப்பு கேட்டனர்.
கார்த்தி படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்டனர்
Published on

சென்னை,

கார்த்தி-ரகுல்பிரீத்சிங் ஜோடியாக நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. வடநாட்டில் இருந்து வந்து கொலை-கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சென்னை புறநகர் பகுதிகளை கதிகலங்க வைத்த பவாரியா கொள்ளையர்கள் பற்றிய உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.
வினோத் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் குற்றப்பரம்பரை என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது. இது குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவதுபோல் உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் வற் புறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற் படுத்திய காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களை வைத்து மட்டுமே இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத்தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு கருத்து இப்படத்தில் சொல்லப்படவில்லை.

இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாக கருதுவதால், அதற்காக தீரன் அதிகாரம் ஒன்று படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதோடு வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றில் இருந்து குற்றப்பரம்பரை என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com