கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படப்பிடிப்பு தொடங்கியது

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்துள்ளார்.
கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படப்பிடிப்பு தொடங்கியது
Published on: 

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 'சர்தார் 2' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மாளவிகா மோகனன், தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிட்டத்தக்கது. தங்கலானுக்குப் பிறகு முதன்முறையாக தெலுங்கில் அறிமுகமாவிருக்கிறார்.இயக்குநர் மருதி இயக்கும் தி ராஜா சாப் படத்தில் நடிகர் பிரபாஸுடன் நடிக்கிறார். தற்போது தமிழில் சர்தார்2 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக அவர் இன்று சென்னை வந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 5ம் தேதி தலக்கோணம் பகுதியில் தொடங்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com