

சென்னை,
இப்படம், 2027-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் அனுராக் பாசு இயக்கத்தில் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா நடிப்பில் ரொமாண்டிக் கதையில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம், 2027-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் மூலம் கார்த்திக் ஆர்யன் மற்றும் ஸ்ரீலீலா முதன்முறையாகத் திரையில் இணைந்து நடிக்கின்றனர். பூஷண் குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு பிரீதம் இசையமைக்கிறார். காதல் மற்றும் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.
முதலில் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், பின்னர் 2026-ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, 2027-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை இன்னும் வெளியிடவில்லை. முன்னதாக இப்படம் ‘ஆஷிகி 3’ என்ற பெயரில் உருவாக இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தலைப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்தப் படத்தில் ஸ்ரீலீலா இந்தி திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் அனுராக் பாசுவின் படைப்பில் கார்த்திக் ஆர்யனும் ஸ்ரீலீலாவும் இணைவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.