கரூர் துயரம் : நம் வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் - நடிகர் ராஜ்கிரண்

கரூர் விஜய் பிரசார நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த், பிரபு தேவா, கமல்ஹாசன், விஷால், கார்த்தி, சரத்குமார், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்திருக்கிறார்கள்.
.இந்த துயர சம்பவம் குறித்து நடிகர் ராஜ்கிரண் “மிகப்பெரும் மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. என்னதான் ஆறுதல் படுத்தப்பார்த்தாலும் மனம் தவிப்பதை, என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கே இந்த நிலையென்றால், நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்?. இறைவா, அந்தக்குடும்பங்களை ஆறுதல் படுத்து. இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய் உயிரை விடாமல், நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு இறைவா ” என பதிவிட்டுள்ளார்.






