காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இரங்கல்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு சுற்றுலா வருவார்கள். இந்த நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும். ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது. அமரன் படப்பிடிப்பின்போது, பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டனர்! தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!" என்று தெரிவித்துள்ளார்.






