

டைகர் ஜிந்தா ஹை படத்தின் வெற்றி, உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது அல்லவா?
ஆமாம். ஒரு நடிகையாக, நான் நடிக்கும் எல்லாப் படங்களும் வெற்றி பெற ஆசைதான். அதிலும் கடும் உழைப்பில் உருவான படங்கள் வெற்றி பெறுவதில் ரொம்பவே மகிழ்ச்சி. சிறந்த படம் என்ற வகையில், டைகர்... முழு வெற்றிக்குத் தகுதியானது. எல்லா நடிகைகளுக்கும் அவர்களது படத்தின் வெற்றி முக்கியமானது. ஆக, இந்த வெற்றியில் நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அடுத்தடுத்து உங்கள் நடிப்பில் வெளியாகப்போகும் படங்களும் வித்தியாசமானதாக இருக்கிறதே?
நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானவைகளாக இருப்பது எனக்கு அதிக மகிழ்ச்சி தருகிறது. அவை எல்லாமே சுவாரசியமான வேடங்கள். இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் நான் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.
உங்களின் மிகப் பெரிய விசிறி என்று நடிகர் அக்ஷய்குமார் சமீபத்தில் கூறியிருக்கிறாரே?
நாங்கள் இருவரும் நட்பில் இருந்தாலும், அடிக்கடி சந்தித்துக் கொண்டதில்லை. என் வாழ்வில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர், அக்ஷய். கடந்த சில ஆண்டுகளாக நான் அவருடன் சேர்ந்து நடிக்கவில்லை. எனக்கு மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். விரைவாக அந்த வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன். அக்ஷய் மிகவும் நேர்மையானவர் என்பதால், அவருடன் இணைந்து நடிக்க அதிக ஆசைப்படுகிறேன்.
சல்மான்கானுடன் நீங்கள் மீண்டும் இணைந்து நடித்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் அல்லவா?
ஆமாம். முதல் படத்தைப் போல இப்படத்திலும் எனக்கும் சல்மானுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மக்கள் இப்படத்தை ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டதை பெரிய விஷயமாகக் கருதுகிறேன்.
உங்களின் லேட்டஸ்ட் படங்களின் மூன்று கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வித்தியாசமானவை அல்லவா?
ஜீரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மிகுந்த சுதந்திரம் கொடுப்பார். அது எனக்கு மிகவும் பிடிக்கும். டைகர் ஜிந்தா ஹை படத்தின் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவும் எனது அபிமான இயக்குனர். அமீருடன் நடிப்பதை நான் மிகவும் ரசிக்கிறேன். திரையுலகின் அறிவுஜீவிகளில் அவரும் ஒருவர். டைகர்... எனது சிறந்த படங்களில் ஒன்று. அதில் நான் மிகவும் நேசிக்கும் அப்பாஸ் அலி, சல்மானுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. நான் கூறிய இவர்கள் எல்லோருமே தங்கள் வேலைகளில் மிகவும் தீவிரமாக இருப்பவர்கள் என்பதால், இவர்களுடன் இணைந்து பணிபுரிய எனக்குப் பிடிக்கும்.
நிறைய புகழ், பாராட்டைச் சம்பாதித்துவிட்ட பெரிய நட்சத்திரமான நீங்கள் இப்போது எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்?
நான் இயற்கையாகவே ஒரு போராளி. எனக்கு எப்போதுமே இலக்குகள் வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன். தவிர, இப்போதைக்கு எனக்குத் திருமணமாகவில்லை, எனக்கு என்று ஒரு குடும்பம் இல்லை. வாழ்க்கையில் உறவு, குடும்பம், குழந்தைகள் எல்லாம் முக்கியம்தான். அவை ஒரு சமநிலையைத் தரும். ஆனால் அவை எல்லாம் இல்லாவிட்டால் நாம் நமது சக்தியை எல்லாம் நம் வேலையில் செலுத்தலாம். நாம் காலையில் எழும்போது நமக்கு என்று ஒரு லட்சியம், அதற்கான ஒரு திட்டம் இருக்க வேண்டும். நாம் நகராமல் தேங்கிக்கிடந்தோம் என்றால், செத்துவிட்டோம் என்று அர்த்தம்.
புதிய நடிகைகள் உங்களுக்கு போட்டியைத் தருகிறார்களா?
அவர்கள் வருகையை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். புது நடிகைகளுடன் போட்டிபோட வேண்டும் என்பதற்காக நான் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. திரையுலகில் நாம் ஒரே ஒருவர் இருந்தாலும் சரி, பத்து நடிகைகள் இருந்தாலும் சரி, நாம் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் ஆக வேண்டும். கடின உழைப்பு என்பது நமது மரபணுவிலேயே இருக்க வேண்டும்.
புதிய நடிகைகளில் நீங்கள் ஆலியா பட்டுடன்தான் அதிக நெருக்கமாக இருப்பது போலத் தோன்றுகிறதே?
ஆலியாவின் நடிப்பு பற்றி நான் பெருமைப்படுகிறேன். மற்ற நடிகைகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்குக் கிடைக்காத சில வாய்ப்புகள் ஆலியாவுக்குக் கிடைக்கின்றன என்பது உண்மை. அவருக்கு 22 வயது, நான் அவரைவிட மூத்தவள். வாழ்க்கை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்ற உண் மையை நாம் உணர வேண்டும். தினந்தோறும் நாம் முன்னால் போய்க்கொண்டே இருக்கிறோம். இது வாழ்க்கையின் ஓட்டம், இதில் வரும் மாற்றங்களை நாம் தழுவிக்கொள்ளத்தான் வேண்டும். இன்று எனக்குப் புதிய, உற்சாகமூட்டும் பல விஷயங்கள் இருக்கின்றன. நான் இன்றிருக்கும் நிலையில், எனக்கு ஏற்ற படங்களை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கத்ரீனாவின் குரலில் தெளிவும் தீர்க்கமும் தெரிகின்றன.