

சென்னை,
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முதல்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு விறுவிறுப்பான 'கோர்ட் ரூம் டிராமா' (Courtroom Drama) பாணியில் உருவாகும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில், மிஷ்கினுடன் அவர் இணைந்து நடிக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.