திலீப் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும்: கேரள நடிகைகள் கூட்டமைப்பு

நடிகர் திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கோர்ட்டு அவரை விடுதலை செய்தது.
எர்ணாகுளம்,
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்ற போது, நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்தது. அதனை வீடியோவாக பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், நடிகர் திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கோர்ட்டு விடுதலை செய்தது.
இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு கூறியுள்ளது. வழக்குகளில் இருந்து அதிகாரமிக்க நபர்கள் விடுதலை ஆவது வாடிக்கையாகிவிட்டது என்றும் நடிகைகள் கூட்டமைப்பு கூறியுள்ளது. இதற்கிடையே தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் திலீப், 'இத்தனை காலம் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. எனக்காக வழக்கு நடத்திய, ஆறுதலாக இருந்த அனைவருக்கும் நன்றி' என்றார்.






