"எம்புரான்" படத்திற்கு ஆதரவுக்குரல் கொடுத்த கேரள முதலமைச்சர்


எம்புரான் படத்திற்கு ஆதரவுக்குரல் கொடுத்த கேரள முதலமைச்சர்
x

பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய ஒரே காரணத்தால் ஒரு கலை படைப்பு அழிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கேரள முதலமைச்சர் கூறியுள்ளார்.

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகமாக 'எல் 2 எம்புரான்' வெளியாகியுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கடந்த 27-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது.

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் எம்புரான். வெற்றிகரமாக வசூலைக் குவித்துவரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கலவரம் சார்ந்த காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் வகுப்புவாத பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்தது.சர்ச்சை விரிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் சில காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளனர். எனினும் வலதுசாரி ஆதரவாளர்கள் மோகன்லாலுக்கு தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

'எம்புரான்' படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில், 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2022 குஜராத் கலவரத்திற்கு தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி என்ற பெயருடன் எம்பூரான் படத்தின் வில்லன் பெயர் பொருந்தி போவதால் இப்படத்திற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் குஜராத் கலவரங்களை குறித்து காட்சிகள் இருப்பதால் இதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மோகன்லால் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருந்தார். மேலும் எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். " நாட்டின் மிக மோசமான இன அழிப்பு சம்பவத்தை 'எம்புரான்' படத்தில் காட்சியாக வைத்தது சங்க பரிவாரம், ஆர்.எஸ்.எஸ், பாஜகவை கோபமடையச் செய்துள்ளது. படத்திற்கு எதிராக பகிரங்கமாக மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக படத்தின் காட்சிகளை நீக்கும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய ஒரே காரணத்தால் ஒரு கலை படைப்பு அழிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல" என கூறியுள்ளார்.

'எம்புரான்' பட சர்ச்சை தொடர்பாக மோகன்லால் சமூக வலைதளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story