ராப் பாடகர் வேடனை கைது செய்ய இடைக்கால தடை விதித்த கேரள உயர் நீதிமன்றம்

பெண் மருத்துவர் உள்ளிட்ட 3 பெண்கள் ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகாரளித்துள்ளனர்.
கேரளா,
சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூடத்தையே உருவாகி வைத்திருப்பவர் வேடன். இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதன் மூலம் பிரபலமும் ஆன இவர் இப்போது தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலை வேடன் எழுதி பாடியுள்ளார்.
கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் இளம்பெண் மருத்துவர் ஒருவர் ராப் இசை பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை சமீபத்தில் புகார் அளித்திருந்தார். அதாவது, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வேடன் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர் தலைமறைவாகி விட்டார். வேடனை கைது செய்யவும், வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்கவும் திருக்காக்கரா போலீஸ் துணை கமிஷனர் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளார். மேலும் முன் ஜாமீன் கேட்டு வேடன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பாடகர் வேடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளார்கள். இசை குறித்து ஆராய்ச்சி செய்வதாக கூறி கொச்சிக்கு வரவழைத்து வேடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரும், வேடன் இசை நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட தன்னை, பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக மற்றொருவரும் புகார் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வேடன் தாக்கல் செய்திருந்த மனு மீது கேரள ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.இந்நிலையில் ராப் பாடகர் வேடனை கைது செய்ய கேரள உயர் ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது






