இணையத்தில் வெளியான 'அரண்மனை 5' போஸ்டர் குறித்து குஷ்பு விளக்கம்


இணையத்தில் வெளியான அரண்மனை 5  போஸ்டர் குறித்து குஷ்பு விளக்கம்
x

‘அரண்மனை’ படத்தின் ஐந்தாவது பாகம் எடுத்தால் நாங்கள் உங்களிடம் நேரடியாக அறிவிப்போம் என்று குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் வெற்றி பெற்றது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை-4 படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படம் கடந்த மே 3ம் தேதி வெளியானது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான 'அரண்மனை 5' தற்போது உருவாகுவதாக ஒரு போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அந்த போஸ்டர் அதிகாரபூர்வமான போஸ்டர் கிடையாது என்று தற்போது அரண்மனை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், "தமிழ் சினிமாவில் மிகப் பெரிய பொழுதுபோக்கு மற்றும் வெற்றிப் படமாக அமைந்தது அரண்மனை. அந்த படத்தின் ஐந்தாவது பாகம் குறித்து ஏராளமான தகவல்கள் உலா வருகிறது. இது தொடர்பாக புகைப்படங்கள், நடிகர்கள், பர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட அனைத்தும் வெளியாகி இருக்கிறது. இது எல்லாமே பொய்யானது. ஒரு வேளை அரண்மனை படத்தின் ஐந்தாவது பாகம் எடுத்தால் நாங்கள் உங்களிடம் நேரடியாக அறிவிப்போம். அதுவரை காத்திருங்கள். கேங்கர்ஸ் படம் விரைவில் வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர் சி, தற்போது கேங்கர்ஸ் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் சுந்தர் சியோடு இணைந்து வடிவேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

1 More update

Next Story